ஹத்ராஸ் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது - உ.பி. போலீஸ் தகவல்


ஹத்ராஸ் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது - உ.பி. போலீஸ் தகவல்
x
தினத்தந்தி 6 July 2024 9:21 AM GMT (Updated: 6 July 2024 12:04 PM GMT)

முக்கியக் குற்றவாளியான தேவபிரகாசை உ.பி. போலீசார் ஹத்ராசுக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ந் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அந்த நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீசார் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105 மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், ஆன்மிக சொற்பொழிவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகர் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் தேவபிரகாஷ் பற்றி துப்பு அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக உ.பி போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தலைமறைவான தேவபிரகாஷ் டெல்லியின் உத்தம்நகரின் நஜப்கரின் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உ.பி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், நேற்று நள்ளிரவு அங்கு சென்ற போலீசார் தேவபிரகாஷை கைது செய்தனர். அப்போது அவரே முன்வந்து சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.

முக்கியக் குற்றவாளியான தேவபிரகாசை உ.பி. போலீசார் ஹத்ராசுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் தேவபிரகாசை இன்று போலீசார் ஹத்ராஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதன் பிறகு அவரை காவலில் எடுத்து உ.பி. போலீஸ் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

உ.பி. அரசு அலுவலரான தேவபிரகாஷ், ஹத்ராஸ் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவரை நேற்று உ.பி. அரசு பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்தது குறிப்பிடதக்கது.


Next Story