அரியானா: பணியின்போது மரணம் அடையும் ராணுவ வீரர்களுக்கான இழப்பீடு ரூ.1 கோடியாக அதிகரிப்பு
அரியானா முதல்-மந்திரி நயப் சிங் தலைமையில் நேற்று கூடிய மந்திரி சபையில், ராணுவ வீரர்களுக்கான இழப்பீட்டு தொகையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சண்டிகார்,
அரியானாவில் பணியின்போது மரணம் அடையும் ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையானது ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த திருத்தியமைக்கப்பட்ட இழப்பீட்டு தொகைக்கான ஒப்புதலை அரியானா மந்திரி சபை வழங்கியுள்ளது. முதல்-மந்திரி நயப் சிங் சைனி தலைமையில் நேற்று (வெள்ளி கிழமை) கூடிய மந்திரி சபையில் இதற்கான ஒப்புதலை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, முப்படைகளை (ராணுவம், கடற்படை, விமானப்படை) சேர்ந்த ஆயுத படை வீரர்கள் போரின்போது பணியில் ஈடுபடும்போதோ, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிப்பு, பயங்கரவாத தாக்குதல்கள் அல்லது எல்லை பகுதியில் குழுவினர் மோதல் மற்றும் ஐ.நா. அமைதி பாதுகாப்பு படையின் பணியில் ஈடுபடும்போதோ உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
இதேபோன்று, மத்திய ஆயுத போலீஸ் படையினர் இயற்கை பேரிடர், தேர்தல்கள், மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளின்போது உயிரிழக்கும்போது, அவர்களுடைய குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கப்பெறும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.