அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்பு


அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 6 Jun 2024 8:21 AM GMT (Updated: 6 Jun 2024 10:00 AM GMT)

நயாப் சிங் சைனி மார்ச் 12-ம் தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்த மனோகர் லால் கட்டார் மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக குருக்ஷேத்ரா எம்.பி.யாக இருந்த நயாப் சிங் சைனி கடந்த மார்ச் 12-ம் தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இந்தநிலையில், மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ததால் காலியாக இருந்த கர்னால் சட்டமன்ற தொகுதியில் மே 25-ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தனது முக்கிய போட்டியாளரான காங்கிரசின் தர்லோச்சன் சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். கடந்த 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் சுமார் 13,668 வாக்குகள் வித்தியாசத்தில் நயாப் சிங் சைனி வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் கர்னால் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி நயாப் சிங் சைனிக்கு சட்டப்பேரவைத் தலைவர் கியான் சந்த் குப்தா இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்னால் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட மனோகர் லால் கட்டார் எம்.பி.ஆக வெற்றி வாகை சூடி உள்ளார்.


Next Story