ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்
கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர்
லக்னோ ,
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், மதபோதகர் போலே பாபா மேடையில் கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சத்சங்க நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேவகர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி,
இது ஒரு சோகமான சம்பவம். இதை நான் அரசியல் பார்வையில் இருந்து கூற விரும்பவில்லை ஆனால் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்துள்ளன, முக்கியமாக அவர்கள் ஏழைக் குடும்பங்கள் என்பதால் அதிகபட்ச இழப்பீடு வழங்கப்பட வேண்டும். உ.பி., முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், திறந்த மனதுடன் இழப்பீடு வழங்க வேண்டும் .இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. என தெரிவித்தார்.