தொழிலதிபரிடம் ஐபோன் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் கைது
தொழிலதிபரிடம் ஐபோன் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் டொலை துறைமுகம் பகுதியில் மரைன் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் தினேஷ் குபவத்.
இவர் அதேபகுதியில் படகுகளுக்கு டீசல் விற்பனை செய்ய உரிமம் பெற்ற தொழிலதிபரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். டீசல் விற்பனை செய்வதற்கான உரிமம் சரியாக இல்லை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஐபோன் 16 புரோ (விலை 1.44 லட்ச ரூபாய்) லஞ்சமாக தரவேண்டுமென தொழிலதிபரை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அந்த தொழிலதிபர் குஜராத் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திட்டப்படி, இன்ஸ்பெக்டர் தினேஷ் குபவத்தை சந்திக்க தொழிலதிபர் ஐபோனுடன் மரைன் போலீஸ் நிலையம் சென்றுள்ளார். தொழிலதிபரிடம் ஐபோனை லஞ்சமாக பெற இன்ஸ்பெக்டர் தினேஷ் முயற்சித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.