மராட்டியத்தை அச்சுறுத்தும் ஜி.பி.எஸ். நோய் - ஒருவர் பலி; 101 பேர் பாதிப்பு


மராட்டியத்தை அச்சுறுத்தும் ஜி.பி.எஸ். நோய் - ஒருவர் பலி; 101 பேர் பாதிப்பு
x

புனேயில் சுமார் 101 பேர் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேயில் சமீபத்தில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் தொற்று பரவி வருகிறது. மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவதால், இந்த நோய் 'ஆட்டோ இம்யூன்' என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகை தான் ஜி.பி.எஸ். ஆகும். இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தநிலையில் சோலாப்பூரில் ஒருவர் ஜி.பி.எஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்து உள்ளார். சோலாப்பூரை சேர்ந்த 40 வயது நபர் சமீபத்தில் புனே வந்து திரும்பினார். அவருக்கு மூச்சுத்திணறல், கீழ் மூட்டுகளில் பலவீனம், உடல் சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டது. சோலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். முதல்கட்ட சோதனையில் அவர் ஜி.பி.எஸ். நோயால் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது.

அவரின் உயிரிழப்புக்கான சரியான காரணத்தை அறிய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக சோலாப்பூர் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சஞ்சய் தாக்குர் கூறினார். மேலும் அவரின் ரத்த மாதிரி ஆய்வுக்காக புனேயில் உள்ள தேசிய தொற்று நோய் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே புனேயில் சுமார் 101 பேர் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புனேயில் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது. இதில் 68 பேர் ஆண்கள். 33 பேர் பெண்கள். இவர்களில் 16 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோலாப்பூரை சேர்ந்த ஒருவர் பாதிப்பால் உயிரிழந்து உள்ளார்" என கூறப்பட்டுள்ளது.

அசுத்தமான தண்ணீரால் ஜி.பி.எஸ். பாதிப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் டாக்டர்கள் குழுவினர் மராட்டியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் புனேயில் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

மாநில சுகாதாரத்துறை மந்திரி பிரகாஷ் அபித்கர் நோய் பாதிப்பு குறித்து புனே சிங்காத் ரோட்டில் உள்ள நாந்தெட் கிராம கிணற்றில் ஆய்வு செய்தார். அங்கு இருந்து தான் அருகில் உள்ள கிராமங்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story