பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த 9 முன்னுரிமைகள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் இன்று, 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, பொருளாதாரத்தில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக 9 முன்னுரிமைகளை அவர் அறிவித்தார்.
அதாவது, உற்பத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்தார்.
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர தட்பவெப்ப நிலைகளைத் தாங்கக்கூடிய விதைகளை (காலநிலை எதிர்ப்பு விதைகள்) உருவாக்குவதற்கான ஆராய்ச்சி குறித்து மத்திய அரசு விரிவான மதிப்பாய்வு மேற்கொள்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். உற்பத்தியை அதிகரிக்க, பெரிய அளவிலான விவசாய தொழில்நுட்ப கூட்டமைப்புக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
32 வயல் மற்றும் தோட்டக்கலை பயிர் வகைகளில் அதிக மகசூலை உறுதி செய்வதற்காக புதிய 109 வகையான காலநிலை எதிர்ப்பு விதைகளை அரசு வெளியிடும். இதுதவிர, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.