மே.வங்க ரெயில் விபத்து: சிக்னலில் நிற்காமல் வந்த சரக்கு ரெயில் - பரபரப்பு தகவல்
மேற்கு வங்காளத்தில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.
கொல்கத்தா,
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 3பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சரக்கு ரெயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே இந்த கோர விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் தானியங்கி சிக்னல்கள் உள்ளன. இரண்டு வழித்தடத்திலும் எப்போதும் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான வழித்தடமாக இது உள்ளது. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் தான் இணைக்கிறது. தற்போது ரெயில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவ்வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.