மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப உடன்பாடு ஏற்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் வன்முறை


மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப உடன்பாடு ஏற்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் வன்முறை
x

File image

தினத்தந்தி 3 Aug 2024 4:06 PM IST (Updated: 3 Aug 2024 4:28 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்பால்,

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் புதியதாக ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர். அங்கு மைத்தேயி மற்றும் ஹமர் குழுக்களுக்கு இடையே இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம் ஏற்பட்ட ஒரு நாளுக்கு பின்பு இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "லால்பானி கிராமத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்று ஆயுதம் ஏந்திய சிலரால் நேற்று தீ வைக்கப்பட்டது. அது தனிமையாக இருக்கும் குடியிருப்பு பகுதியாகும். அங்கு சில மைத்தேயி சமூகத்தினரின் வீடுகள் இருந்தன. மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்ட பின்பு அவைகளில் பெரும்பாலானவை கைவிடப்பட்டன.

குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்திக் கொண்டு இந்த தீவைப்புச் சம்வத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய அந்த குழுவினர் கிராமத்தை குறிவைத்து பலமுறை துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர். மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப உடன்ல்பாடு ஏற்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது" என்றார்.

முன்னதாக, அசாமின் கச்சாரை ஒட்டியுள்ள சிஆர்பிஎப் முகாமில் மைத்தேயி மற்றும் ஹமர் பிரிவின் பிரதிநிதிகளுக்கு இடையே கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இக்கூட்டத்தினை ஜிரிபாம் மாவட்ட நிர்வாகம், அசாம் ரைபில்ஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தாடேவு, பைடே, மற்றும் மிசோ சமூகத்து பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

"மாவட்டத்தில் இயல்பு நிலையை உருவாக்க இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு போன்ற செயல்கள் ஏற்படாமல் தடுக்க முழு முயற்சி எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஜிரிபாம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் இரு தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த இயக்கத்தினை உருவாக்க இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்" என்று கூட்டத்தில் பங்கேற்ற சமூகத்தின் பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அடுத்த கூட்டம் ஆக.15ம் தேதி நடைபெற இருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குகி ஸோ மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வன்முறை மூண்டது. இனக்கலவரமாக மாறி மாநிலம் முழுவதும் பரவிய அந்த வன்முறையால் 200 அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story