இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்


இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2024 7:43 PM IST (Updated: 28 Jun 2024 1:59 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என தமிழக முதல் அமைச்சருக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு இன்று பதில் கடிதம் எழுதியுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர், "மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக நீங்கள் ஜூன் 19, 24 மற்றும் 25ம் தேதிகளில் எழுதிய கடிதங்கள் கிடைத்தது. ஜூன் 26ஆம் தேதியின் விவரங்களின்படி, 34 இந்திய மீனவர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் தண்டனை பெற்று தண்டனை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், யாழ்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீனவர் பிரச்சனை 1974ஆம் ஆண்டு ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்'என்று கூறியுள்ளார்.


Next Story