பிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்


பிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
x

தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் வரும் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் அமராவதி மாவட்டம் ஹலார் கிராமத்தில் நேற்று இரவு பாஜக தேர்தல் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கூட்டணியின் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பாஜக முன்னாள் எம்.பி. நவ்நீத் கவுர் ராணா சென்றிருந்தார்.

அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் முன்னாள் எம்.பி. நவ்தீப் கவுர் ராணா மற்றும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர். கவுர் ராணா மீது கற்கள், நாற்காலியை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ராணா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். பாஜக முன்னாள் எம்.பி. நவ்நீத் கவுர் தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story