முதல் டிரில்லியனர் எலான் மஸ்க் ; 2 வது நம்ம... அதானி


முதல் டிரில்லியனர் எலான் மஸ்க் ; 2 வது நம்ம... அதானி
x
தினத்தந்தி 9 Sep 2024 2:09 PM GMT (Updated: 10 Sep 2024 5:48 AM GMT)

இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி 2028-ல் அடுத்த டிரில்லியனர் என்ற பெருமையை பெற இருப்பதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அதிபரான எலான் மஸ்க் 2027-ம் ஆண்டுக்குள் உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய தொழில் அதிபரான நம்ம கவுதம் அதானி 2028-ல் அடுத்த டிரில்லியனர் என்ற பெருமையை பெற இருக்கிறார். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி, டிரில்லியன் என்பது லட்சம் கோடி ஆகும்)

இன்போர்மா கனெக்ட் அகாடமி என்ற நிறுவனம் வருங்கால டிரில்லியனர் பற்றி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

237 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் உள்ளார். இவர் தான் உலகின் முதல் டிரில்லியனராக வருவார். இந்நிலையை அடைய இவரது நிறுவனங்கள் சராசரியாக 110 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளர வேண்டும்.

100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவான சொத்துக்களுடன் உலக பில்லியனர் குறியீட்டில் 13வது இடத்தில் இருக்கிறார் இந்தியாவின் அதானி. அவரது துறைமுகங்கள், மின்துறை போன்ற கூட்டு நிறுவனங்கள் தற்போது உள்ளதைபோல தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், இரண்டாவது டிரில்லியனராக வர வாய்ப்பு உள்ளது. தற்போது இவரது நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 123 சதவீதம் ஆகும்.

111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் உள்ள அம்பானி, 2033ல் அதே நிலையை அடையலாம் என்று அறிக்கை கூறுகிறது. அவரது எண்ணை-தொலைத்தொடர்பு-மற்றும் சில்லறை வணிகக் குழுமம் 2035 ஆம் ஆண்டில் டிரில்லியன் டாலர் மார்க்கெட் கேப் நிலையை எட்டும்.

டிரில்லியன் டாலர் மார்க்கெட் கேப் குறியைத் தொடும் நிறுவனங்களில் தைவானின் செமிகண்டக்டர் தயாரிப்பாளரான டிஎஸ்எம்சியும் அடங்கும், இது இப்போது 893.7 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது மற்றும் 2025 இல் அந்த நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே மதிப்பீட்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளன. இதில் மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பாபெட் அமேசான், அரோமா மெடா ஆகியவை அடங்கும்.


Next Story