சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல்


சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல்
x
தினத்தந்தி 25 Jun 2024 7:50 AM GMT (Updated: 25 Jun 2024 11:27 AM GMT)

மக்களவையில் நாளை சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், சபாநாயகராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளாது. கடந்த காலங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருவரும் இணைந்து ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வார்கள்.

ஆனால், இம்முறை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறாத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் துணை சபாநாயகர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். அதே சமயம் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியும் துணை சபாநாயகர் பதவி வழங்கினால் பா.ஜ.க. நிறுத்தும் சபாநாயகருக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதனால் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் மூண்டுள்ளது.

இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லாவை வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தியுள்ளது. அதேபோல, இந்திய கூட்டணி சார்பில் 8 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள கொடிக்குனில் சுரேஷை அப்பதவிக்கு அறிவித்துள்ளது.

மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து நாளை காலை சபாநாயகர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story