2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்தது- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்


2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்தது- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
x

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

தினத்தந்தி 22 July 2024 1:41 PM IST (Updated: 22 July 2024 2:44 PM IST)
t-max-icont-min-icon

உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதில், 2025ம் நிதியாண்டில் உண்மையான ஜி.டி.பி. வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பணவீக்கம் குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேலும், உலகளாவிய பிரச்சினைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் சீரற்ற பருவமழை ஆகியவற்றால் பணவீக்கம் தூண்டப்பட்டபோதிலும், நிர்வாக மற்றும் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. 2023-ம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இயல்பான பருவமழையின் எதிர்பார்ப்பு, இறக்குமதி பொருட்களுக்கான விலைகளை கட்டுப்படுத்துதல் ஆகியவை ரிசர்வ் வங்கியின் ஸ்திரமான பணவீக்க கணிப்புகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.

நிதி நிர்வாகத்தில் இந்தியா சிறந்த சமநிலையை அடைவதற்கு, வரி இணக்க ஆதாயங்கள், செலவினக் கட்டுப்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை உதவுகின்றன.

குறுகிய கால பணவீக்க கண்ணோட்டம் கடுமையாக இருக்காது. ஆனால் பருப்பு வகைகளில் தொடர்ச்சியான பற்றாக்குறையையும், அதன் விளைவாக விலை உயர்வு தொடர்பான அழுத்தத்தையும் இந்தியா எதிர்கொள்கிறது.

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை எக்ஸ் தளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi


Next Story