வதோதரா கார் விபத்து.. அபராதம் விதிப்பது வேலைக்கு ஆகாது: காயமடைந்த நபர் ஆதங்கம்

கார் ஓட்டியபோது தான் மது அருந்தவில்லை என்று கைது செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவன் ரக்சித் சவுராசியா விசாரணையின்போது கூறி உள்ளார்.
வதோதரா:
குஜராத் மாநிலம் வதோதராவில் சட்டக்கல்லூரி மாணவன் கடந்த வெள்ளிக்கிழமையன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படுத்திய விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாறுமாறாக வாகனத்தை ஓட்டி முன்னால் சென்ற இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளினார். இதில் ஒரு பெண் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதில் ஒரு வீடியோவில், விபத்தை ஏற்படுத்திய ரக்சித் சவுராசியா, காரில் இருந்து தள்ளாடியபடி இறங்கிய பின், "இன்னொரு ரவுண்டு இன்னொரு ரவுண்டு" என்று கத்துவது கேட்கிறது. போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் வைத்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், கார் ஓட்டியபோது தான் மது அருந்தவில்லை என்று ரக்சித் சவுராசியா விசாரணையின்போது கூறி உள்ளார். சாலையில் இருந்த பள்ளத்தால் விபத்து ஏற்பட்டதாகவும், காரில் இருந்த ஏர்பேக் திறந்ததால் முன்னால் உள்ள வாகனங்களை பார்க்க முடியவில்லை, அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறி உள்ளார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடுமையான தண்டனை கிடைத்தால் மட்டுமே இதுபோன்றவர்கள் தேங்கள் தவறை உணர்வார்கள் என்று காயமடைந்த விகாஸ் கெவாலானி ஆதங்கத்துடன் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக கெவாலானி மேலும் கூறியதாவது:
நான், எனது சகோதரர், சகோதரி மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணவன்-மனைவி ஆகியோர் சாப்பிடுவதற்காக வெளியே சென்றிருந்தோம். பைக்கில் திரும்பி வரும் வழியில், வேகமாக வந்த வாகனம் பின்னால் இருந்து மோதியது. எங்களுடன் வந்திருந்த தம்பதியரில் ஹேமலி படேல் பலியானார். அவரது கணவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
என் சகோதரனுக்கும் சகோதரிக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனக்கு வலது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதுபோன்ற குற்றங்களை வெறும் அபராதத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. அபராதம் என்பது தீர்வாகாது. கடுமையான தண்டனை கிடைக்கும்போதுதான் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்வார்கள். வாகனம் ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்ததுபோல் தெரிந்தது. அவர் ஜாலிக்காக வேகமாக வாகனம் ஓட்டி உள்ளார். சாதாரணமான நிலையில் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.