டிஜிட்டல் கைது மோசடி: ரூ.10 லட்சத்தை இழந்த விமான பணிப்பெண்


டிஜிட்டல் கைது மோசடி: ரூ.10 லட்சத்தை இழந்த விமான பணிப்பெண்
x

மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 24 வயதான விமான பணிப்பெண் ஒருவர் டிஜிட்டல் கைது என்ற இணைய மோசடியில் சிக்கி ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார்.

மும்பை

இணைய வழி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக 'டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ, வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகின்றனர். இதனை நம்பி பயந்து போனவர்கள், மோசடி கும்பலிடம் பணத்தை இழக்கின்றனர்.

அந்த வகையில் மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 24 வயதான விமான பணிப்பெண் ஒருவர் டிஜிட்டல் கைது என்ற இணைய மோசடியில் சிக்கி ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார். கடந்த நவம்பர் 23-ம் தேதி அன்று அடையாளம் தெரியாத எண்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் வந்துள்ளன. எதிர்முனையில் பேசியவர் உங்களது பார்சல் சோதனையின்போது எங்களிடம் சிக்கியது என கூறினார். இதற்கு தான் எந்த பார்சலையும் யாருக்கும் அனுப்பவில்லை என அந்த பெண் கூறியுள்ளார். அதற்கு பணமோசடி வழக்கில் உங்கள் பெயர் உள்ளது என வீடியோ அழைப்பில் மோசடியாளர்கள் மிரட்டினர்.

இந்த வழக்கில் இருந்து தப்பிக்க ரூ.9.93 லட்சம் பணத்தை உடனடியாக தங்களுக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்தினர். இவ்வாறு செய்தால் உங்கள் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்படும் எனவும் இல்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் அழுத்தம் கொடுத்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண் மோசடியாளர்கள் கூறிய கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டப்பின் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த நபர்களை தேடிவருகின்றனர்.


Next Story