மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை


மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
x
தினத்தந்தி 27 Jun 2024 11:31 AM IST (Updated: 27 Jun 2024 1:03 PM IST)
t-max-icont-min-icon

நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

18-வது மக்களவையின் முதல் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு குதிரைப் படை புடைசூழ நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர். இந்த நிலையில் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:-

60 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அரசின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை இந்த அவை நிறைவேற்றும். நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். இந்த நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்களில் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது. தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளுக்கு நம் நாடு தீர்வு காணும் என்று உலக அரங்கில் நம்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story