டெல்லி: சிரித்துக்கொண்டே லஞ்சத்தொகையை பிரித்து கொண்ட காவலர்கள்; கவர்னர் அதிரடி


டெல்லி:  சிரித்துக்கொண்டே லஞ்சத்தொகையை பிரித்து கொண்ட காவலர்கள்; கவர்னர் அதிரடி
x
தினத்தந்தி 19 Aug 2024 5:23 AM GMT (Updated: 19 Aug 2024 6:00 AM GMT)

டெல்லியில் போக்குவரத்து துறையை சேர்ந்த 2 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் உள்ளிட்ட 3 பேர் லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் போக்குவரத்து காவலர்கள் 3 பேர், லஞ்ச தொகையை பிரித்து கொண்ட வீடியோ காட்சி வைரலானது. இதனை தொடர்ந்து, அந்த வீடியோ கவர்னரின் கவனத்திற்கு சென்றது.

டெல்லியின் காஜிப்பூர் பகுதியில் திரில் லாவ்ரி சர்க்கிள் என்ற இடத்தில் சோதனை சாவடி ஒன்று உள்ளது. இதில், நபர் ஒருவர் போக்குவரத்து காவலருடன் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதன்பின், காவலரின் பின்புறத்தில் இருந்த மேஜை மீது பணக்கட்டு ஒன்றை தூக்கி போட்டு விட்டு அந்த நபர் சென்று விடுகிறார்.

அவர் சென்றதும், இந்த காவலர் அந்த பணக்கட்டை எடுத்து அதில் எவ்வளவு பணம் உள்ளது? என எண்ணுகிறார். இதன்பின், வீடியோவின் மற்றொரு காட்சியாக, காவலர்கள் 3 பேரும் அடுத்தடுத்து அமர்ந்தபடி இருக்கின்றனர்.

இதில், முதலில் கூறிய காவலர் தன்னிடம் இருந்த பணக்கட்டில் உள்ள கரன்சி நோட்டுகளை எடுத்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார். அவர்கள் இருவரும் அதனை சிரித்து கொண்டே வாங்கி கொள்கின்றனர்.

அவர்களில் 2 பேர் உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஒருவர் தலைமை காவலர் என தெரிய வந்துள்ளது. இவர்கள் 3 பேர் பற்றிய வீடியோ வெளியானதும், முதல்கட்ட விசாரணைக்கு பின் அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனா கூறியுள்ளார். அவர்களுக்கு எதிராக விரிவான துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story