டெல்லி சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சி கடுமையாக உழைத்து வருகிறது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் இந்த தேர்தலில் போட்டியிடும் எனவும் காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை எனவும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 21 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் எம்.பி.யான சந்தீப் தீட்சித் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.