"பட்டம் பெறுவதால் பயனில்லை; பஞ்சர் கடை வைக்கலாம்" மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ


மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பா ஜனதா எம்எல்ஏ
x
தினத்தந்தி 17 July 2024 12:27 AM GMT (Updated: 17 July 2024 5:30 AM GMT)

பா.ஜனதா எம்.எல்.ஏ. பன்னாலால் ஷக்யாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

போபால்,

நாட்டில் உயா்கல்வியை மேம்படுத்தும் வகையில் பிரதமா் சிறப்புக் கல்லூரி (பிஎம் காலேஜ் ஆப் எக்சலன்ஸ்) என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியின் திறப்பு விழா நடந்தது. இதில் அந்த தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா பங்கேற்று பேசினார். அப்போது அவர், "இங்கு பிரதமா் சிறப்புக் கல்லூரியைத் தொடங்கியுள்ளோம். மாணவா்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படித்து கிடைக்கும் பட்டத்தால் ஒன்றும் நடந்துவிட போவதில்லை. இதற்கு பதிலாக மோட்டாா் சைக்கிளுக்கு பஞ்சா் பாா்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்" என்றார்.

மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதற்கு பதில் பஞ்சர் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என பா ஜனதா எம் எல் ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "முன்னதாக, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பக்கோடா விற்க கூறினார் பிரதமர் மோடி. இப்போது அவரது எம்.எல்.ஏ.க்கள் கல்லூரி பட்டங்களை பயனற்றவை என்றும், பஞ்சர்கடை திறக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சொல்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.


Next Story