காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரை கடந்தது- கடலோர மாவட்டங்களில் கனமழை
பூரி, ஜெகத்சிங்பூர், குர்டா, கட்டாக், தேன்கனல் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
புவனேஸ்வர்:
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஒடிசா கடற்கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. பூரி அருகே கரைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தாலும், புயலாக இருந்தாலும், கரைகடக்கும் செயல்முறை முடிய நீண்ட நேரம் ஆகும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூரியில் இன்று கரை கடந்தபோது காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வரை காற்று வீசியதாக புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரி, ஜெகத்சிங்பூர், குர்டா, கட்டாக், தேன்கனல் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதால் ஒடிசாவின் சில பகுதிகளில், குறிப்பாக மல்கங்கிரி மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான பூரி, ஜகத்சிங்பூர், கட்டாக், தேன்கனல் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மாநில பேரிடர் அதிவிரைவு படைகளும் தயார் நிலையில் உள்ளன.