ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு - டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதி


ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு - டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதி
x

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ, 2,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 17-ந்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதி ஆகும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தநிலையில், ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் ரூ.25 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். ராஜஸ்தானில் இந்த திட்டத்தை தொடங்கினோம். இது ராஜஸ்தானில் ஒரு புரட்சிகரமான திட்டமாக அமைந்தது. ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டம் டெல்லிக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கும். இந்த திட்டம் காங்கிரசுக்கு வெற்றியை தேடி தரும் என்றார். முன்னதாக, பியாரி திதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2,500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.


Next Story