ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்:முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் அதற்குள் அங்கு புதிய அரசு தேர்வு செய்யப்படுவது அவசியம் என்பதால் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இதனால், ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் 70 தொகுதிகளில் போட்டியிடும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதர 11 தொகுதிகள் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.