அரியானா தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கடுமையாக சிந்திக்க வேண்டும் - உமர் அப்துல்லா


அரியானா தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கடுமையாக சிந்திக்க வேண்டும் - உமர் அப்துல்லா
x
தினத்தந்தி 9 Oct 2024 1:44 PM IST (Updated: 9 Oct 2024 2:49 PM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற கருத்து கணிப்புகள் இவ்வளவு தவறாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

நடந்து முடிந்த 2 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காஷ்மீரை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. அரியானாவில் பாஜக 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில், அரியானாவில் பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அரியானா தோல்விக்கான காரணங்களை கண்டறிய காங்கிரஸ் ஆழ்ந்த சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, அரியானாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இந்த கருத்து கணிப்புகளால் நேரத்தை வீணடிப்பதாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் கருத்து கணிப்புகள் இவ்வளவு தவறாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 18க்கு பதிலாக 20 ஆக இருந்திருந்தால் அல்லது 20க்கு பதிலாக 22 ஆக இருந்திருந்தால் சரி. ஆனால் நடந்தது என்னவென்றால், 30 ஆக இருந்தது 60 ஆகவும், 60 ஆக இருந்தது 30 ஆகவும் மாறியது. அரியானா தோல்விக்கான காரணங்கள் குறித்து காங்கிரஸ் கடுமையாக சிந்திக்க வேண்டும் என்றும் இதற்கான காரணங்களையும் காங்கிரஸ் கட்சி கண்டறிய வேண்டும். எனது வேலை தேசிய மாநாட்டு கட்சியை இயக்குவதும் இங்குள்ள கூட்டணிக்கு உதவுவதும் ஆகும், அதை நான் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story