10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை: தேர்வு அறையில் செல்போனுடன் பிடிபட்டதால் விபரீத முடிவு


10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை: தேர்வு அறையில் செல்போனுடன் பிடிபட்டதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 24 Dec 2024 4:36 PM IST (Updated: 24 Dec 2024 6:05 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு அறையில் செல்போனுடன் பிடிபட்ட 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டம் உத்வட் கிராமத்தை சேர்ந்த மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், பள்ளியில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. அப்போது, தேர்வு அறையில் அந்த மாணவன் செல்போனை பயன்படுத்தியுள்ளான். இதை கண்ட ஆசிரியர் அந்த மாணவனிடமிருந்து செல்போனையும், விடைத்தாளையும் வாங்கியுள்ளார். பின்னர், அச்சிறுவனை கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், வேறு விடைத்தாளை கொடுத்து இதில் எழுதும்படி கூறியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த மாணவன் மாற்று விடைத்தாளில் எழுதியுள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற அந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

தேர்வு அறையில் செல்போனுடன் பிடிபட்டு ஆசிரியர் எச்சரித்ததால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

மாணவனின் இந்த விபரீத முடிவு குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story