ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு; அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு; அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 7 Nov 2024 11:02 AM IST (Updated: 7 Nov 2024 12:24 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 2வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 4-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை நேற்று கூடிய போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் கூடிய சட்டசபை கூட்டத்தில் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து என்ஜினீயர் ரஷீத்தின் சகோதர குர்ஷித் அகமது, சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து பதாகையை காண்பித்ததால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால் காவலர்களை வரவழைத்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் 15 நிமிடங்களுக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியபோது பாஜக பெண் எம்.எல்.ஏ., ஷகுன் பரிஹார் மேஜையில் நின்றதால், அவரை சமாளிக்க பெண் மார்ஷல்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதால், அவர்கள் மார்ஷல்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.


Next Story