பீகார் சிறையில் தற்கொலைக்கு முயன்ற சீன கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


பீகார் சிறையில் தற்கொலைக்கு முயன்ற சீன கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 Jun 2024 3:08 PM IST (Updated: 11 Jun 2024 3:35 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சிறையில் தற்கொலைக்கு முயன்ற சீன கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாட்னா,

சீனாவின் ஷாங்டாங்க் மாகாணத்தை சேர்ந்தவர் லி ஜியக்யூ. இவர் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்.

இதனிடையே, பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பிரமபுரா நகரம் லட்சுமி சவுக் பகுதியில் லி ஜியக்யூவை கடந்த 6ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி லி ஜியக்யூ இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து சீன வரைபடம், செல்போன், சீனா, இந்தியா, நேபாள ரூபாய் நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட லி ஜியக்யூ முசாபர்நகர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறையில் உள்ள கழிவறையில் உடைந்த கண் கண்ணாடியை கொண்டு லி ஜியக்யூ தனது உடலின் முக்கிய உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், படுகாயமடைந்த லி ஜியக்யூவை மயங்கியுள்ளார். பின்னர், அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லி ஜியக்யூ இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story