சத்தீஷ்கார்: பத்திரிகையாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது - முக்கிய குற்றவாளி தலைமறைவு
பத்திரிகையாளர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர பத்திரிகையாளரான முகேஷ் சந்திரகர் (33), கடந்த 1-ந்தேதி காணாமல் போன நிலையில், அவரது சடலம் சத்தன்பரா பஸ்தி பகுதியில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேஷ் சந்திரகர் தற்போது தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரது உறவினர்களான ரிதேஷ் சந்திரகர், தினேஷ் சந்திரகர் மற்றும் மேற்பார்வையாளர் மகேந்திரா ராம்டேகே ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கு சத்தீஷ்கார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி மயங்க் குர்ஜார் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை சத்தீஷ்கார் மாநில அரசு அமைத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஷ்கார் துணை முதல்-மந்திரி விஜய் சர்மா, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சுரேஷ் சந்திரகர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும், தற்போது தலைமறைவாக உள்ள அவரை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிஜப்பூரில் சாலை கட்டுமான பணிகளில் ஊழல் நடந்ததாக கடந்த டிசம்பர் 25-ந்தேதி ஊடகங்களில் வெளியான செய்திக்கும், முகேஷ் சந்திரகரின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் விஜய் சர்மா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.