சத்தீஷ்கார்: 7 பெண்கள் உள்பட 29 நக்சல்கள் போலீசில் சரண்


சத்தீஷ்கார்: 7 பெண்கள் உள்பட 29 நக்சல்கள் போலீசில் சரண்
x

சத்தீஷ்காரில் 7 பெண்கள் உள்பட 29 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள குதூல் என்ற பகுதியை சேர்ந்த நக்சல்கள் 29 பேர் இன்று எல்லை பாதுகாப்பு படை மற்றும் இந்தோ திபெத் எல்லை காவல் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். இதில் 7 பேர் பெண்கள் ஆவர்.

மாவோயிஸ்ட் அமைப்பின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், நாராயண்பூர் மாவட்டத்தின் மாட் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றங்களை நடைபெறுவதன் காரணமாகவும் இவர்கள் நக்சல் இயக்கத்தில் இருந்து விலகி போலீசில் சரணடைய முடிவு செய்துள்ளனர் என்று நாராயண்பூர் எஸ்.பி. பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் இதுவரை நாராயண்பூர் மாவட்டத்தில் மொத்தம் 71 நக்சல்கள் போலீசில் சரணடைந்துள்ளனர். அதே சமயம், சுமார் 60-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரணடைந்த நக்சல்கள் அனைவருக்கும் அரசு சார்பில் தலா ரூ.25,000 நிதியுதவி மற்றும் மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்படும் என்றும், தவறான கொள்கைகளை கைவிட்டு, நிம்மதியான, இயல்பான வாழ்க்கையை வாழும் வகையில் நக்சல்கள் அனைவரும் சரணடைய முன்வர வேண்டும் என்றும் எஸ்.பி. பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.


Next Story