முதுநிலை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு: நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவு ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. தேர்வு நடந்ததில் இருந்து தேர்வு முடிவு வெளியானது வரை வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஒரு வழியாக இளநிலை நீட் தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.இளநிலை நீட் தேர்வு விவகாரம் அப்போது விஸ்வரூபம் எடுத்திருந்ததால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தையநாள் இரவு அந்த தேர்வை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒத்திவைத்தது.அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர்.
இந்த நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் தொலை தூரங்களில் அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வு மையஙகள் தொலை தூரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.