புற்றுநோய் சிகிச்சை சர்ச்சை வீடியோ: ஏமாறாதீர்கள்...நோயாளிகளை எச்சரிக்கும் டாடா மெமோரியல் மருத்துவமனை


புற்றுநோய் சிகிச்சை சர்ச்சை வீடியோ: ஏமாறாதீர்கள்...நோயாளிகளை எச்சரிக்கும் டாடா மெமோரியல் மருத்துவமனை
x
தினத்தந்தி 23 Nov 2024 11:26 PM IST (Updated: 23 Nov 2024 11:26 PM IST)
t-max-icont-min-icon

புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியிட்ட வீடியோவுக்கு, விளக்கம் கொடுத்து டாடா மெமோரியல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உயிர் பிழைப்பதற்கு 5 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறிய நிலையில், 40 நாள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாகவும் கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்த வீடியோவில், கடுமையான உணவு கட்டுப்பாடுகளின் மூலம், புற்றுநோயில் இருந்து தனது மனைவி பூரணமாக குணமடைந்து விட்டதாகவும், மஞ்சள், வேப்பிலை தண்ணீர், ஆப்பிள், வினிகர், எலுமிச்சை தண்ணீர் மற்றும் சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்த உணவுகளையே சாப்பிட்டதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து டாடா மெமோரியல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உணவு பழக்க வழக்கங்கள் மூலம் புற்றுநோயில் இருந்து தனது மனைவி குணமடைந்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரரின் கூற்று ஆதாரமற்றது. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஓன்று, அடிப்படையில்லாத மருத்துவ பரிந்துரையாகும். மஞ்சள், வேப்பிலை தண்ணீர், சர்க்கரை இல்லாத உணவுகள் மூலம் புற்றுநோயில் இருந்து குணமடைந்ததாக அவர்கள் கூறுவதற்கு எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் கிடையாது.

மேலும் இதுபோன்ற ஆதாரமற்ற முறைகளை நம்பி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மேற்கொள்ள தாமதிக்க வேண்டாம். உடனடியாக, புற்றுநோய் டாக்டர்களை அணுகி தகுந்த சிகிச்சை முறைகளை பெற வேண்டும். புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், ஆபரேசன், ரேடியேசன் தெரபி, கீமோதெரபி மூலம் குணமடையச் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story