டெல்லியில் கொடூரம்; பைக் உரசிய தகராறில் இளம்பெண் சுட்டு கொலை
டெல்லியில் பைக் உரசிய தகராறில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியை எடுத்து சுட்டதில், கணவர் கண் முன்னே மனைவி பலியானார்.
புதுடெல்லி,
டெல்லியில் கோகல்புரி பகுதியில் பறக்கும் சாலையில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில், சிம்ரன்ஜீத் கவுர் (வயது 30) மற்றும் அவருடைய கணவர் ஹீரா சிங் (வயது 40) ஆகிய 2 பேரும் பைக் ஒன்றில் சென்றனர்.
அப்போது, இவர்களுடைய பைக் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது உரசுவது போல் சென்றுள்ளது. இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியை எடுத்து சுட்டதில், சிம்ரன்ஜீத் கவுரின் நெஞ்சு பகுதியின் மேற்பாகத்தில், கழுத்துக்கு அருகே குண்டு துளைத்தது.
இதனை தொடர்ந்து, மனைவியை தூக்கி கொண்டு ஜி.டி.பி. மருத்துவமனைக்கு ஹீரா சிங் சென்றார். எனினும், அதில் பலனில்லை. அதற்கு முன்பே சிம்ரன் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவானது. சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு விசாரணை நடந்து வருகிறது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
மராட்டியத்தின் புனே நகரில், கடந்த 20-ந்தேதி ஸ்கூட்டரில் 2 குழந்தைகளுடன் சென்ற 27 வயதுடைய ஜெரிலின் டி சில்வா என்ற இளம்பெண் ஒருவரை, காரில் பின்தொடர்ந்த ஆடவர் ஒருவர் அவரை முந்தி செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவருக்கு வழி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், 2 கி.மீ. தூரத்திற்கு பின்னாலேயே பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் ஸ்கூட்டரை முந்தி சென்று குறுக்காக காரை நிறுத்தினார். இதன்பின் காரில், ஆத்திரத்தில் இருந்த நபர் கீழே இறங்கி, ஜெரிலினின் தலைமுடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தி, தாக்கினார்.
இதில், அந்த பெண்ணுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் கூடியுள்ளனர். கூட்டம் கூடியதும் அந்நபர் தப்பி சென்று விட்டார். அவர் யாரென்ற விவரம் தெரிய வரவில்லை. இதுபற்றி அதிர்ச்சிகர வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது.
இந்த சம்பவம் பற்றி சதுர்ஷிரிங்கி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். காரில் சென்ற நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சாலையில் இதுபோன்று அராஜக செயலில் ஈடுபடும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.
புனே நகரில், கடந்த 2 மாதங்களுக்கு முன் 17 வயது சிறுவன் சொகுசு ரக காரை கொண்டு மோதியதில் 2 ஐ.டி. நிறுவன இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இதேபோன்று, ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், முந்த்வா-மஞ்சரி சாலையில் கோழிகளை ஏற்றி சென்ற லாரி மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியின் மகன் சவுரப் பண்டு குடிபோதையில் காரை கொண்டு ஏற்றியுள்ளார். இதில், ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 2 பேர் காயமடைந்தனர்.