இளம்பெண், இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர்; வேடிக்கை பார்த்த மக்கள் - வீடியோ வைரல்


இளம்பெண், இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர்; வேடிக்கை பார்த்த மக்கள் - வீடியோ வைரல்
x
தினத்தந்தி 1 July 2024 4:54 AM IST (Updated: 1 July 2024 4:59 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் இளம்பெண் மற்றும் இளைஞரை, சாலையின் நடுவே பலர் கூடியிருக்க ஒருவர் கொடூர தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலானது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா நகரில் சாலையின் நடுவே மக்கள் பலர் கூடியிருந்தபோது, இளைஞர் மற்றும் இளம்பெண் என இருவரை, நபர் ஒருவர் கம்புகளை திரட்டி வைத்து கொண்டு கடுமையாக அடித்து, தாக்கினார்.

ஆனால், அதனை தடுக்க ஒருவரும் முன்வரவில்லை. அந்த இளம்பெண், வலியால் அலறி துடித்தபோதும், பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடியே இருந்தனர். ஒரு சிலர், அந்நபரின் கையில் இருந்த குச்சிகளை வாங்கி, அவரை அடிக்க விடாமல் தடுக்க முயன்றனர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில், பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவொன்றில், அந்த இளம்பெண்ணை இரக்கமின்றி அடித்த நபர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாஜேமுல் என்பவர் ஆவார்.

அவர் விரைவாக நீதி வழங்குவதில் பிரபலம் அடைந்தவர் என்பதுடன், சோப்ரா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹமிதுர் ரகுமானுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் என்று தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அவர்கள் இருவரை அடித்து, தாக்கும் தாஜேமுல் பற்றி ரகுமான் கூறும்போது, அந்த பெண் செய்ததும் தவறு. கணவர், மகன் மற்றும் மகளை தனியாக விட்டு சென்ற கொடிய விலங்கு.

எனினும், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இது கிராமத்தில் நடக்கும் விவகாரம் என்றும் இதற்கும் எங்களுடைய கட்சிக்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி.யான முகமது சலீமும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார். உள்ளூரை சேர்ந்த இடதுசாரி தலைவர் ஒருவர் கொலையுடன் தாஜேமுல்லும் கூட ஒரு குற்றவாளியாவார் என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அந்நபரை பிடித்து சென்று உள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story