வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த மணமகனை பணய கைதியாக பிடித்து வைத்த பெண் வீட்டார்


வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த மணமகனை பணய கைதியாக பிடித்து வைத்த பெண் வீட்டார்
x
தினத்தந்தி 3 Dec 2024 8:57 PM IST (Updated: 3 Dec 2024 9:02 PM IST)
t-max-icont-min-icon

வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த மணமகனை பெண் வீட்டார் பணய கைதியாக பிடித்து வைத்தனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்தவர் சோகன்லால் யாதவ். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அமேதியை சேர்ந்த லால் பகதுர் யாதவ் என்பவரின் மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. முதலில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த சோகன்லால் யாதவ், பின்னர் மணப்பெண்ணின் தந்தையிடம் தனக்கு வரதட்சணையாக கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

பெண் வீட்டார் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், தனக்கு கார் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பணம் வேண்டும் என்றும் சோகன்லால் யாதவ் கேட்டுள்ளார். அதற்கும் பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்து திருமண வேலைகளை தொடங்கியுள்ளனர். இதன்படி நேற்றைய தினம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மணமகன் சோகன்லால் யாதவ் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் மணமகன் சோகன்லால் யாதவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் வரதட்சணை வழக்கு பதிவு செய்வதாக கூறியதால், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு சோகன்லால் யாதவ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமின்றி அவர்கள் சோகன்லால் யாதவை பணய கைதியாக பிடித்துச் சென்றனர். திருமணத்திற்கு ஏற்பட்ட செலவு அனைத்தையும் சோகன்லால் யாதவ் திருப்பி தர வேண்டும் என்றும், அதன் பிறகே அவரை விடுவிப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதே சமயம் சோகன்லால் யாதவ், தனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் இருப்பதாகவும், பெண் வீட்டார்தான் பிரச்சினை செய்வதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் பெண் வீட்டார் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையும் பலனளிக்காத நிலையில், சோகன்லால் யாதவ் தற்போதுவரை மணப்பெண் வீட்டாரின் பிடியில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story