வனப்பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை மிதித்து 3 கரடிகள் உயிரிழப்பு
வனப்பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை மிதித்து 3 கரடிகள் உயிரிழந்தன.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, வனப்பகுதியில் நக்சலைட்டுகளால் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் தாண்டேவாடா அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்த கண்ணிவெடியை மிதித்த 3 கரடிகள் உயிரிழந்தன. கண்ணிவெடியை மிதித்த 3 கரடிகளும் உடல்சிதறி உயிரிழந்தன.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உயிரிழந்த கரடிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கரடியின் உடல்களை வனப்பகுதியில் புதைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.