ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: அமித் ஷா


ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: அமித் ஷா
x
தினத்தந்தி 3 Nov 2024 3:21 PM IST (Updated: 3 Nov 2024 4:05 PM IST)
t-max-icont-min-icon

ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டார்.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக (நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.

முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் பழங்குடியினர் அந்த சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள். பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் கலாச்சாரத்தை பொது சிவில் சட்டம் பாதிக்கும் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசாங்கம் தவறான பிரசாரம் செய்கிறது. இது முற்றிலும் ஆதாரமற்றது. ஏனெனில் பழங்குடியினர் அந்த சட்ட வரம்பிற்கு வெளியே வைக்கப்படுவார்கள்.

சர்னா மதச் சட்ட பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தி உரிய முடிவுகள் எடுக்கப்படும். ஜார்க்கண்டில் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கப் பணிகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வை உறுதி செய்வதற்காக இடப்பெயர்வு ஆணையம் அமைக்கப்படும்.

2.87 லட்சம் அரசு வேலைகள் உள்ளிட்ட 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படும்.

ஜார்க்கண்டில் ஊடுருவி ஆக்கிரமித்த நபர்களிடம் இருந்து நிலங்களை திரும்ப பெறவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றவும் சட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.


Next Story