ஒடிசாவில் பா.ஜனதா அபார வெற்றி: நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது


ஒடிசாவில் பா.ஜனதா அபார வெற்றி: நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 4 Jun 2024 10:52 PM GMT (Updated: 5 Jun 2024 7:12 AM GMT)

தேர்தல் முடிவு வெளிவர தொடங்கியதில் இருந்தே பிஜூ ஜனதா தளம் பின்னடைவை சந்தித்தது.

புவனேஸ்வரம்,

ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதன் மூலம், 24 ஆண்டு கால பிஜூ ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனால் இந்தியாவில் அதிக ஆண்டுகாலம் முதல்-அமைச்சர் பதவி வகித்தவர் என்ற சாதனையை பெறும் வாய்ப்பையும் நவீன் பட்நாயக் இழந்தார்.

நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக். இவர் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் பிஜூ ஜனதா தளம் கட்சியை தொடங்கி, கடந்த 2000-ம் ஆண்டு ஒடிசாவில் ஆட்சியை பிடித்து முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

அதன்பிறகு தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒடிசா மாநிலத்தில் 5 முறை முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார்.

தற்போது 77 வயதாகும் நவீன் பட்நாயக், 2024-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 6-வது முறை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன், பிஜூ ஜனதா தளம் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருகட்சிகளும் தனித்தனியாக களம் இறங்கின.

நவீன்பட்நாயக், தனது செயலாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டினை பிஜூ ஜனதா தளம் கட்சியில் சேர்த்ததுடன், அவரை பிரசார தளபதியாக்கி தேர்தலை சந்தித்தார்.

நவீன் பட்நாயக்கின் இந்த வியூகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது பா.ஜனதா. ஒடிசா மண்ணை, வேற்று மாநிலத்தை சேர்ந்தவருக்கு தாரை வார்ப்பதா என்று கேள்வி எழுப்பியது.

அத்துடன் புகழ் பெற்ற புரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவியை பிரசாரத்தில் முன்னிலை படுத்தியது பா.ஜனதா. இந்த விவகாரமும் விசுவரூபம் எடுத்தது. அத்துடன் முதல்-மந்திரி நவீன்பட் நாயக்கின் உடல் நிலை குறித்தும் பா.ஜனதா கேள்வி எழுப்பியது.

இதையே பிரசார களத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கையில் எடுத்தனர். இது ஒடிசா மாநில மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அந்த மாநில அரசியல் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிஜூ ஜனதா தளத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தேர்தல் முடிவு வெளிவர தொடங்கியதில் இருந்தே பிஜூ ஜனதா தளம் பின்னடைவை சந்தித்தது. பா.ஜனதா வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி முகத்தில் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜனதா 78 இடங்களை பெற்றது. பிஜூ ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களையும், மற்றவர்கள் 4 இடங்களையும் பெற்றனர்.

இதன் மூலம் ஒடிசாவில் நவீன்பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் மிக அதிக நாட்கள் அதாவது 24 ஆண்டுகள் 165 நாட்கள் முதல்-மந்திரி பதவியில் இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் சிக்கிம் மாநில முதல்-மந்திரியாக இருந்த பவன்குமார் சாம்லிங்.

அவருக்கு அடுத்ததாக 24 ஆண்டுகள் 71 நாட்கள் முதல்-மந்திரி பதவியில் இருந்தவர் நவீன்பட்நாயக்.

இந்தமுறை வெற்றி பெற்று நவீன்பட்நாயக் முதல்-மந்திரியாகி இருந்தால், இன்னும் சில நாட்களில் பவன்குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிக நீண்டகாலம் முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற சாதனையை அவர் படைத்து இருப்பார். ஆனால் அது நூலிழையில் தப்பிவிட்டது.


Next Story