டெல்லி சட்டசபை முதல் கூட்டத்தொடரில் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு


டெல்லி சட்டசபை முதல் கூட்டத்தொடரில் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும்:  பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
x

டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் பேசிய பிரதமர் மோடி, யாரெல்லாம் பணம் கொள்ளையடித்தனரோ அவர்கள் அதனை திருப்பி தரவேண்டும் என பேசியுள்ளார்.

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் ஆம் ஆத்மி பிரசாரத்தில் ஈடுபட்டது. பல வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தது.

காங்கிரஸ் கட்சியுடன் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்றிருந்தபோதும், தனித்து களமிறங்கியது. காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இது பா.ஜ.க.வுக்கு சாதக நிலையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், தேர்தலின் முடிவை அறிவதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 6.30 மணியளவில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

டெல்லியில் ஆட்சியமைக்க, 36 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், 47 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. இதனால், அக்கட்சி ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, பேரழிவை ஏற்படுத்தும் இந்த நபர்கள் (ஆம் ஆத்மியை குறிப்பிட்டு), சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு சதித்திட்டங்களை செயல்படுத்த முனைந்தனர். ஆனால், நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

டெல்லி சட்டசபையில் நடைபெறவுள்ள முதல் கூட்டத்தொடரில், தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எவரெல்லாம் கொள்ளையடித்தனரோ, அவர்கள் அதனை திருப்பியளிக்க வேண்டும் என பேசியுள்ளார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகளால், ரூ.2,026 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் அறிக்கை தெரிவித்தது.

கொள்கை விசயங்களில் இருந்து விலகி செல்லுதல், விற்பனை விலையில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை மற்றும் உரிமங்களை வழங்கியதில் விதிமீறல்கள் போன்றவை உள்ளன என தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதனால், அரசு கஜானாவுக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டது என அப்போது தெரிவிக்கப்பட்டது.


Next Story