ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்தல்.. பெங்களூரு பொறியாளர் தற்கொலை வழக்கில் மனைவி, மாமியார் கைது
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, வழக்குகளை முடித்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அதுல் சுபாஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஏ.ஐ. பொறியாளர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்திற்கு முன் தான் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்துவிட்டு, 90 நிமிட வீடியோவையும் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். பிரிந்து சென்ற மனைவி மற்றும் மகனுக்கு பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
"வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டனர். உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார்.
சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. நான் எவ்வளவு கடினமாக உழைத்து, என் வேலையில் சிறந்து விளங்குகிறேனோ, அவ்வளவு அதிகமாக நானும் என் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறோம், மிரட்டி பணம் பறிக்கப்படுகிறோம், மேலும் இதை ஒட்டுமொத்த சட்ட அமைப்பும் ஊக்குவிக்கிறது.
இப்போது, நான் போனதால், பணமும் இருக்காது, என் வயதான பெற்றோரையும், என் சகோதரனையும் துன்புறுத்த எந்த காரணமும் இருக்காது" என்று அதுல் சுபாஷ் உருக்கமாக தெரிவித்திருந்தார். மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்பு தொகை கேட்டு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாக அதுல் சுபாஷ் தற்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுல் சுபாஷுக்கு நீதிகேட்டு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த தற்கொலை தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகினர். அவர்கள் மூன்று நாட்களுக்குள் போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டில் பெங்களூரு போலீஸ் நோட்டீஸ் ஒட்டியது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். அரியானாவின் குருகிராமில் இருந்து நிகிதா கைது செய்யப்பட்டதாகவும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்து அவரது தாய் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.