அசாம்: சாலை விபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் உயிரிழப்பு
அமெரிக்காவை சேர்ந்த பெண் அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திஸ்பூர்,
அசாம் மாநிலம் ஹோஜய் மாவட்டத்தில் உள்ள லும்டிங் என்ற பகுதியில் இன்று இருசக்கர வாகனம் மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இது குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, விபத்தில் சிக்கியது அமெரிக்காவை சேர்ந்த பெண் என்பது தெரியவந்தது.
அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த அமெரிக்க பெண்ணின் பெயர் எலைன் பெர்ரி என்பதும், அவர் இந்தியாவில் சமூக சேவை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
சில்சார் பகுதியில் இருந்து தெமாஜி நோக்கி எலைன் பெர்ரி பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரக் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.