அடியோடு குறைந்த மாணவர் சேர்க்கை.. அருணாசல பிரதேசத்தில் 600 பள்ளிகளை மூடியது அரசு
முதல் மந்திரி கிச்கா கோஷ் திட்டத்தின்கீழ் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர்களின் பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது.
இடாநகர்:
அருணாசல பிரதேச சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் வாயி, கல்வித்துறை தொடர்பான கேள்வி எழுப்பினார். அரசுப் பள்ளிகளின் நிலைமை மற்றும் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகள் குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா அளித்த பதில் வருமாறு:-
மாநிலம் முழுவதும் செயல்படாத அல்லது பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை கொண்ட சுமார் 600 பள்ளிகளை அரசு மூடியுள்ளது. மாணவர் சேர்க்கை அடியோடு குறைந்து முற்றிலும் செயல்படாத பள்ளிகள் மூடப்பட்டன, மிக குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகள் வேறு பள்ளியுடன் இணைக்கப்பட்டன. இதுபோன்று மேலும் சில பள்ளிகளை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் 2,800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இதில், 7,600-க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்கள் உள்ளனர். முதல் மந்திரி சிக்சா கோஷ் திட்டத்தின்கீழ் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர்களின் பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது. ஆசிரியர் நியமன தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அருணாச்சல பிரதேச பொது சேவை ஆணையத்திடம் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு கல்வி மந்திரி சோனா தெரிவித்தார்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi