ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் அமெரிக்கா புறப்பட்டது


ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் அமெரிக்கா புறப்பட்டது
x
தினத்தந்தி 20 July 2024 2:33 AM GMT (Updated: 20 July 2024 2:38 AM GMT)

ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் அமெரிக்கா புறப்பட்டது

புதுடெல்லி,

ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு தேவையான மருத்துவ வசதி, தரைவழி போக்குவரத்து உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகரை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றபோது, திடீரென வழியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டது.

இந்த நிலையில், ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறொரு விமானத்தில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்தில் ஏ.ஐ.183 என்ற விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும், ஏ.ஐ.1179 எண் கொண்ட மற்றொரு விமானத்தில் ஏற்றி, பின்னர் அவர்கள் சான் பிரான்சிஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்காக தனியாக குழு ஒன்றும் செயல்பட்டது. இதன்படி, பயணிகள் அனைவருக்கும் முறைப்படி, தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. இதில், தேவைப்பட்ட பயணிகளுக்கு மருத்துவ வசதி, தரைவழி போக்குவரத்து உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

இதன்படி, அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் அந்த விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானம் புறப்பட்டு சென்றதும், ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிறருக்கு நன்றி தெரிவித்து கொண்டது.

இதேபோன்று, அனைத்து விமான பயணிகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போதிய உணவு ஆகியவையும் எங்களுடைய குழுவினரால் எடுத்து செல்லப்பட்டு உள்ளன என்று ஏர் இந்தியா நிறுவனமும் தெரிவித்து உள்ளது.


Next Story