மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது

மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.
இந்நிலையில், மணிப்பூரில் உள்ள இம்பால் மேற்கு மாவட்டத்தில் தனித்தனி நடவடிக்கைகளில் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 பயங்கரவாதகள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட மக்கள் புரட்சிகர முன்னணி காங்லீபாக் அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை நேற்று நம்துலோங் குமான் லம்பாக் மெயின் ஸ்டேடியம் சாலையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஆஷேம் தினேஷ் மீட்டே (41) மற்றும் ஹுய்ட்ரோம் டோம்பா சிங் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் நம்துலோங் பகுதியில் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த சனிக்கிழமை லாங்கோல் கேம் கிராம மண்டலம் 2இல் தடைசெய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் தோங்ராம் பித்யாஷ்கர் சிங் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கையடக்க ரேடியோ பெட்டிகள், 4 சார்ஜர்கள், பல்வேறு ராணுவ உடைமைகள், மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.