தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்


தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 Jun 2024 7:36 AM (Updated: 25 Jun 2024 12:00 PM)
t-max-icont-min-icon

விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தெரு நாய்கள் கொடூரமாக கடிக்கத் தொடங்கின.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய். கட்டுமான தளத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் இவர், அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சஞ்சய்யின் மகளான 2 வயது சிறுமி, கட்டுமான தளத்திற்கு வெளியே நேற்று இரவு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், திடீரென சிறுமியை கொடூரமாக கடிக்கத் தொடங்கின. சஞ்சய் வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், அவரது மனைவி குளித்துக்கொண்டிருந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த சஞ்சய் தனது குழந்தையை நாய்கள் கடித்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தெரு நாய்கள் சிறுமியை கடித்து சுமார் 150 மீட்டர் வரை இழுத்துச்சென்றது. நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாய்கள் கடித்ததில் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சிறுமி இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், நாய்கள் கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story