நடுக்கடலில் மூழ்கிய படகில் இருந்த 12 மீனவர்கள் மீட்பு
இந்திய கடலோர காவல்படை, பாகிஸ்தான் படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை மூலம் நடுக்கடலில் மூழ்கிய படகில் இருந்த 12 மீனவர்களை மீட்டனர்.
காந்தி நகர்,
டிசம்பர் 2-ம் தேதி, குஜராத்தின் போர்பந்தரிலிருந்து 12 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். வட அரபிக்கடலில் நேற்று(4.12.2024) காலை படகு சென்று கொண்டிருந்தபோது, கடல் சீற்றத்தால் மூழ்கியது. இதனால் நடுக்கடலில் தத்தளித்த 12 மீனவர்களும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய படையினர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
இது குறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் கூறியதாவது:
அரபிக் கடலில் படகு மூழ்குவதாக தகவல் கிடைத்ததும் காந்திநகரில் உள்ள கடலோர காவல் படை பிரிவுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
கடலோர காவல்படை கப்பல் சார்தக் உடனடியாக அந்த இடத்திற்கு திருப்பி விடப்பட்டது. எம்.ஆர்.சி.சி, பாகிஸ்தானை தொடர்பு கொண்டு அப்பகுதியில் உள்ள அந்த நாட்டின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பினருக்கும் தகவல் தெரிவித்தது.உயிர் பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியில் எம்.வி காஸ்கோ குளோரி என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களும் உதவினர். இதன் முடிவில் மூழ்கிய படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த தேடல் மற்றும் மீட்பு பணியானது இந்திய கடலோர காவல்படை மற்றும் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் போர்பந்தர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியக் கடலோர காவல் படை எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.