புனே கார் விபத்து: ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை குப்பையில் வீசிய டாக்டர்கள்: பகீர் தகவல்


புனே கார் விபத்து:   ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை குப்பையில் வீசிய டாக்டர்கள்: பகீர் தகவல்
x
தினத்தந்தி 28 May 2024 3:30 AM GMT (Updated: 28 May 2024 3:54 AM GMT)

புனே கார் விபத்து சம்பவத்தில் மற்றொரு அதிரடி திருப்பமாக விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மது குடிக்கவில்லை என்பதை நிரூபிக்க ரத்த மாதிரியை மாற்றிய 2 அரசு டாக்டர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற அப்பாவி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனை 300 வார்த்தையில் கட்டுரை எழுதுமாறு கூறி சிறார் கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது, பொதுமக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இதேபோல சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவும் அவன் மதுகுடிக்கவில்லை என வந்ததும் சந்தேகத்தை எழுப்பி இருந்தது. சிறுவனும் அவனது நண்பர்களும் விபத்து நடந்த அன்று பார் ஓட்டலில் ரூ.48 ஆயிரத்துக்கு மது குடித்த ஆதாரம் கிடைத்தபோதிலும், ரத்த மாதிரி சோதனையில் சிறுவன் மதுகுடிக்கவில்லை என வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி, வேறு நபரின் ரத்தத்தை சோதனை செய்து முடிவை வெளியிட்டதாக புனேயில் உள்ள சசூன் அரசு ஆஸ்பத்திரி தடயவியல் மருத்துவ துறை தலைவர் டாக்டர் அஜய் தவாரே, அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்ரீஹரி கால்னோர் ஆகியோரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை விஷால் அகர்வால், டாக்டர் அஜய் தவாரேயை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றுவதற்கு பிரதிபலனாக தேவையானவற்றை செய்து தருவதாக டாக்டரிடம் உறுதி அளித்து இருக்கிறார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை டாக்டருக்கு பல முறை போனில் பேசிய ஆதாரங்கள் சிக்கி உள்ளன.

சிறுவனின் தந்தை பேசியதை அடுத்து தான் டாக்டர் அஜய் தவாரே ரத்த மாதிரியை மாற்றி உள்ளார். சிறுவனின் ரத்த மாதிரி குப்பையில் வீசப்பட்டு, வேறு நபரின் ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

எனினும் போலீசார் மரபணு சோதனைக்காக சிறுவனின் ரத்த மாதிரியை வேறு ஒரு ஆஸ்பத்திரி ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். இந்த ஆய்வக பரிசோதனை முடிவும், சாசூன் ஆஸ்பத்திரி பரிசோதனை முடிவும் வேறுபட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே புலன் விசாரணையில், டாக்டர்கள் ரத்த மாதிரி அறிக்கையை மாற்றி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

டாக்டர்கள் கைது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறியதாவது:-

சிறுவனிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி மரபணு சோதனைக்காக மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இது சசூன் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இதனால் டாக்டர்களின் குட்டு அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்தல், குற்றச்சதி ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை விஷால் அகர்வாலை சக குற்றம்சாட்டப்பட்டவராக ஆக்கி உள்ளோம். சிறுவனுக்கு பதிலாக யாரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது என்பது குறித்து சசூன் ஆஸ்பத்திரி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்"என்றார். சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டர்களுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கைதான 2 டாக்டர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 30-ந்தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.ஏற்கனவே சிறுவனுக்கு பதிலாக, தங்கள் வீட்டு டிரைவரை மிரட்டி அவர் தான் கார் ஓட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளிக்க வைத்ததாக சிறுவனின் தாத்தாவை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்தநிலையில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி புனே சசூன் ஆஸ்பத்திரியில் உயர் பதவியில் இருக்கும் 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story