யு.பி.எஸ்.சி. 2-ம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு


யு.பி.எஸ்.சி. 2-ம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு
x

வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வை சந்திக்க இருக்கிறார்கள்.

புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் காலியிடங்களுக்கு தகுதியானவர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. இந்த பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யு.பி.எஸ்.சி. வெளியிட்டது. மொத்தம் 1,056 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்டோரும், தமிழகத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் ஆர்வம் காட்டினார்கள்.

இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி வெளியானது. அதில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக சொல்லப்பட்டது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எழுதவேண்டும். அந்தவகையில் முதன்மை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 20, 21, 22, 28 மற்றும் 29-ந்தேதிகளில் காலை மற்றும் பிற்பகல் என நடந்தது.

இந்த தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது. இதில் நாடு முழுவதும் 2,845 பேர் வெற்றி பெற்றிருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வை சந்திக்க இருக்கிறார்கள். முதன்மை தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்வு முடிந்த 70 நாட்களில் இந்த முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.


Next Story