ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்


ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்
x
தினத்தந்தி 22 Nov 2024 5:25 PM IST (Updated: 25 Nov 2024 5:42 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

மும்பை,

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவில் அதானி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் நேற்று இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. அதன் விளைவாக நேற்று பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

அதன்படி, 557.35 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 907.25 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 762.50 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 135.40 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

1,961.32 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 117.11 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 350.30 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 623.75 புள்ளிகளில் நிறைவடைந்தது. 142.20 புள்ளிகள் உயர்ந்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 306.85 புள்ளிகளிலும், 923.48 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 306.05 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

30 சென்செக்ஸ் நிறுவனங்களும் பச்சை நிறத்தில் முடிவடைந்தன. பாரத ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்போசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் கைமாறின. நேற்று சரிவில் இருந்த அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்வுடன் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.5,320.68 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். அதே உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,200.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன. ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தது என்றாலும் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் சரிவில் நிறைவடைந்தன. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் சரிவில் நிறைவடைந்தன. அதேசமயம், நேற்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.

முன்னதாக, நேற்று சென்செக்ஸ் 422.59 புள்ளிகள் சரிந்து 77,155.79 புள்ளிகளில் நிலைத்தது. அதேபோல நிப்டி 168.60 புள்ளிகள் சரிந்து 23,349.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story