கர்நாடக சட்டசபையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட்


கர்நாடக சட்டசபையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 21 March 2025 6:07 PM IST (Updated: 21 March 2025 6:47 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் 18 பேர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், சட்டசபை விவகாரத்துறை மந்திரி எச்.கே.பட்டீல், சபாநாயகரின் பீடத்தில் ஏறி அந்த அதற்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளதால் இந்த ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களை 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யுமாறு கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை சபாநயகர் யு.டி.காதர் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார். அதன்படி, பா.ஜனதாவை சேர்ந்த தொட்டண்ணா கவுடா பட்டீல், எதிர்க்கட்சி தலைமை கொறடா அஸ்வத் நாராயண், எஸ்.ஆர்.விஸ்வநாத், பைரதி பசவராஜ், எம்.ஆர்.பட்டீல், சன்னபசப்பா, சுரேஷ்கவுடா, உமாநாத் கோட்யான், சரணு சலகார், சைலேந்திர பில்தாலே, சி.கே.ராமமூர்த்தி, யஷ்பால் சுவர்ணா, பி.பி.ஹரிஷ், பரத்ஷெட்டி, முனிரத்னா, பசவராஜ் மத்திமூட், தீரஜ் முனிராஜ், சந்துரு லமானி ஆகிய 18 பேர் 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் யு.டி.காதர் அறிவித்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த 18 பேரும் சபையில் கலந்து கொள்ள முடியாது. அவர்கள் பார்வையாளர் மாடம், அல்லது எம்.எல்.ஏ.க்கள் மாடத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. சபை நடவடிக்கையில் அவர்களின் பெயர்களை எங்கும் குறிப்பிடக்கூடாது. இந்த இடைநீக்க காலத்தில் அவர்கள் கூறும் எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவர்களுக்கு தினசரி படி வழங்கப்படாது. இந்த 6 மாத காலத்தில் அவர்கள் குழு கூட்டத்தில் பங்கேற்று வாக்களிக்க முடியாது என்று சட்டசபை செயலாளர் விசாலாட்சி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story