திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்: சந்திரபாபு நாயுடு
கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இலவச தரிசன டிக்கெட்டை பெற நேற்றிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர்.
அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதிக்கு அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களிடம் நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
"கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கோவிலின் புனிதம் கெட்டுவிடாத அளவுக்கு பணியாளர்கள் செயல்பட வேண்டும்." என்றார்.